![villupuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/Jq5LOjBe27KQaufFFmDotNnCcYJ3I8U5NnbTrAOuhuU/1596884153/sites/default/files/inline-images/villupuram%20600_1.jpg)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ளது நகனூர் பட்டி கிராமம். இந்த கிராமத்தில் மலைக்குன்று உள்ளது. இதன் அருகே உள்ள அடுக்கம்பாரையில் சமணர்கள் படுக்கைகள் உள்ளன. அவை ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மேலும் பிராமி தமிழ் எழுத்து கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன.
இந்தப் பாறையில் அருகில் உள்ள பாறைகளில் சட்டவிரோதமாக வெடிவைத்து உடைப்பதால் பாறையிலிருந்த பிராமி தமிழ்க் கல்வெட்டு உள்ள பாறைகளும் கடும்பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. இதுகுறித்த வரலாற்று ஆர்வலர்களும் ஜெயின் சமூகத்தினரும் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் மூலம் தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து நகனூர் பட்டி பிராமி கல்வெட்டு மற்றும் சமணர் படுக்கையை வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கு வசதியாக அறிக்கை அனுப்பும்படி தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திண்டிவனம் சப் கலெக்டர் அனுநேற்று நகனூர் பட்டியில் உள்ள சமணர் படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். கல்வெட்டு உள்ள பகுதியை வருவாய்த் துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது செஞ்சி வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஒன்றிய ஆணையர் குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர். பாறை உடைப்பு குறித்து செஞ்சி வட்டாட்சியர் கோவிந்தராஜ் வளத்தி போலீசில் புகார் செய்துள்ளார்.‘
அந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி விசாரணை நடத்தி பாறையை வெடிவைத்து உடைத்த நகனூர் பட்டியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சங்கர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் வெடி வைத்து பாறையை உடைத்த டிராக்டர் உரிமையாளரை தேடி வருகின்றனர் போலீசார்.