கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டத்திற்குட்பட்ட பூண்டி கிராம பொதுமக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், திருமுட்டம் வட்டம் பூண்டி கிராமத்தின் அருகே குணமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை தற்போது பூண்டி கிராமத்தில் திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்தால் அந்த சாலையில் பொதுமக்கள் நடமாட முடியாது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது பயத்தில்தான் செல்லக்கூடிய சூழல் ஏற்படும். வெளியூரில் விற்பனை செய்யப்படும் மதுவை குடித்துவிட்டு, சாலையில் நின்றுகொண்டு பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுத்து மது போதையில் பொதுமக்களை திட்டியும், வழிவிடாமல் சிலர் தற்போதும் தடுத்து வருகிறார்கள். மதுக்கடையை இதே கிராமத்தில் திறந்தால் இன்னும் மிக மோசமான நிலை உருவாகும். தற்போது டாஸ்மாக் கடை திறக்கும் இடத்திற்கும் கிராமத்திற்கும் சுமார் 30 அடி தூரம் தான் உள்ளது.
டாஸ்மாக் கடையை பூண்டி கிராமத்தில் திறந்தால் எங்கள் எல்லாரையும் கிராமத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டு திறக்க அனுமதியுங்கள். கடையைத் திறக்க முற்பட்டால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாது. இது சம்பந்தமாக திருமுட்டம் வட்டாட்சியருக்கும் மனு கொடுத்துள்ளோம். எனவே தாங்கள் மனுவினை பரிசீலனை செய்து கடையினை பூண்டி கிராம பகுதியில் திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களுடன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயக்குமார், காட்டுமன்னார்கோவில் வட்டச் செயலாளர் வெற்றிவீரன், வட்டத் துணைச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.