பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சீதா கிங்ஸ்டன் பள்ளி செயல்பட்டுவந்தது. இந்தப் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து கடந்த 1999 ஆண்டு வரை குத்தகை எடுத்து நிர்வகித்துவந்தனர். 1999க்கு பிறகு மாத வாடகையாக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் கட்டி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி நஷ்டத்தில் இயங்கியதால், கடந்த ஆட்சியில் பள்ளியின் அனுமதியை நிறுத்திவைத்தனர். பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பல போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் பள்ளியை மீண்டும் இயக்க அனுமதி தராததால் பள்ளி சில ஆண்டுகளாக மூடியே கிடந்தது.
இத்தகவல் தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு செல்ல, அரசே பள்ளியை ஏற்று நடத்தும் என அறிவித்தார். இதனையொட்டி முதல்வரின் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வி ஆணையர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் நேற்று (15.06.2021) மாலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டுப் பள்ளியை மீண்டும் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்தைக் கேட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் அமைச்சர். பின்னர் பள்ளியின் சாவியை முதல்வர் நிர்மலா கௌரியிடம் ஒப்படைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் குத்தகையின் அடிப்படையில் கலவலகண்ணன் செட்டி சாரிடபுள் டிரஸ்ட் சார்பில் சீதா கிங்ஸ்டன் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றுவந்தது. இந்தப் பள்ளியின் குத்தகை காலம் முடிவடைந்ததையடுத்து, வாடகை பணத்தைச் செலுத்த முடியாமல் பள்ளியின் நிர்வாகம் இருந்து வந்தது. அதன் அடிப்படையில் 78 சட்டப்பிரிவின்படி இந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த சென்ற ஆண்டே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பள்ளியின் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தை அணுகியதை அடுத்து ஓராண்டு பள்ளியை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
அந்த ஓராண்டு முடிவுற்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சாரிடபுள் டிரஸ்டை அணுகி பேசினோம். அப்போது தங்களால் தொடர்ந்து பள்ளியைத் தொடர முடியாத சூழ்நிலையையும் பொருளாதார நெருக்கடியையும் கருத்தில்கொண்டு பள்ளியை அரசிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூறினர். இந்தப் பள்ளியிலே 750 மாணவச் செல்வங்களும், 57 ஆசிரியர்களும் ஊழியர்களும் உள்ளனர். திடீரென்று பள்ளியை நிர்வகிக்க முடியாததால் இதனை முதல்வரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஐந்து நிமிடங்களில் இந்தப் பள்ளியை அரசே எடுத்து நடத்தும் என்று கூறியதை ஏற்று, இந்தப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள் சார்பிலும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை மன மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளியைப் பற்றி கூறும்போது சொல்வார்கள், ஓராண்டு பலன் வேண்டுமா நெல்லை நட வேண்டும், பத்தாண்டு பலன் வேண்டுமா அதற்கு மரத்தை நட வேண்டும், நூறாண்டு பலன் வேண்டுமா அதற்கு கல்வியைத் தர வேண்டும் என்பார்கள். அந்த நூறாண்டு வாழ்கின்ற கல்வியை இந்தப் பள்ளிக்கு முதல்வர் வழங்கியதற்காக மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கு முன்னர் இந்தப் பள்ளி சாரிடபுள் டிரஸ்ட் மூலம் எவ்வாறு நடத்தப்பட்டதோ அதேபோன்று தற்போதும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலும் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும், பள்ளிக்குத் தேவைப்படும் உதவிகளையும் செய்து கொடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
அந்தவகையில், தேவையான அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு இன்றில் இருந்தே தொடங்கி நிறைவேற்றித் தருவோம். 750 மாணவர்கள் இந்தப் பள்ளியில் தற்போது பயில்கிறார்கள். அடுத்த ஆண்டு இந்த பள்ளியின் தரத்தை மேலும் உயர்த்தி, கூடுதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்வோம். முழு நேரமும் இந்து சமய அறநிலையத்துறையின் பார்வையும், ஆணையரின் பார்வையும் இந்தப் பள்ளியின் மீது வைத்து, இங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்தார். அப்போது சாவியைப் பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் ஆனந்தக் கண்ணீர்விட்டு தமிழ்நாடு முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.