
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அதிமுகவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எடப்பாடியே முதல்வர் என்ற ராஜேந்திரபாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவை கட்சி உரிய நேரத்தில் எடுக்கும். முதல்வர் வேட்பாளர் பற்றி பொதுவெளியில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்துவதாக அமையும் என தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அதிமுக-திமுக போட்டிதான் இதுவரை தமிழகத்தில் இருந்தது, இனி பாஜக-திமுக போட்டிதான் தமிழகத்தில் இருக்கும். தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் எனக் கூறியிருந்தார் அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு,
முருகன் சொன்னாரா... பாஜகவின் தலைவர் முருகன் இந்த கருத்தை சொன்னாரா... சொல்லியது யார் வி.பி.துரைசாமி, சொன்னது பாஜகவின் தலைவர் முருகன் இல்லையே. அந்த கட்சியில் கருத்துரிமை உள்ளதால் அவரும் கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த கருத்தை பாஜக தலைவர் முருகன் சொல்லவில்லையே என்றார்.
உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நீங்கள் சாக்லேட்பாய் என்று சொன்னதற்கு பிளேபாய் என்று கூறியிருந்தார் ஏன்? என்ற கேள்விக்கு,
நான் அவரை சுவீட்டாக சாக்லேட்பாய் என்று தான் கூறி இருந்தேன். ஆனால் அவர் என்னை பிளேபாய் என்று கூறிவிட்டார். அவர் மட்டுமல்ல அவர், அவர் தாத்தா, அப்பா, அவரது பரம்பரையே பிளேபாய் தான் என்றார்.