
சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் இன்று (09/10/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனை, உட்கட்சித் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி பொதுக்குழுவில் அறிவித்தார். கனிமொழி துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
இந்நிலையில் வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''தலைவர் அண்ணன், துணைப் பொதுச்செயலாளர் தங்கை என வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் நினைக்கிறார்கள். ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமம். திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழிக்கு எனது வாழ்த்துக்கள். திருவள்ளுவரை ஆன்மீகவாதியாக நம்புகிறார்கள். அவர் அவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார். மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்க ஆளுநர் ரவி அப்படி பேசி இருக்கலாம். ராஜராஜ சோழன் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி ஒரு நோக்கத்துடன் திருக்குறளை படித்து வருகிறார். அதுபற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்''என்றார்.