
சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். இதில் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து பிரதமர் மோடிக்கு எதிராக பெண்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. மகளிரணி நிர்வாகியான பாரதிராமஜெயம், “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என இருந்த நிலையை மாற்றி கேஸ் அடுப்பு தந்தவர் கலைஞர். வேலைக்குப் போய்விட்டு வந்து, மண் அடுப்பில் விறகை வைத்து ஊதி, ஊதி எரியவைத்து உணவு சமைக்கும் போது அதிலிருந்து வெளிவரும் புகையால் பல நோய்களுக்கு ஆளான பெண்களைக் காப்பாற்றியவர் கலைஞர்.

இன்று மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசாங்கம், பெண்களை மீண்டும் விறகு அடுப்பில் சமையுங்கள் என சமையல் எரிவாயு விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறார். ஏழை மக்கள் இனி சம்பாதிப்பதை கேஸ் கம்பெனிக்காரர்களுக்குத் தரச் சொல்கிறார். இதுதான் ஆட்சி செய்யும் லட்சணமா” எனப் பேசினார்.
மகளிர் தொண்டரணி நிர்வாகியான லட்சுமி பேசும்போது, “ஆண்களுக்கு நிகராக பெண்கள் வாழவேண்டும் என கலைஞர் திட்டங்கள் தீட்டி கல்வி, திருமண உதவித்திட்டம் வழங்கினார். தற்போது ஆட்சியில் உள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்வர் மிக்ஸி தந்தார், கிரைண்டர் தந்தார். மிக்ஸி போட்டால் அதன் மூடி பக்கத்துவீட்டில் போய் விழுகிறது. கிரைண்டர் போட்டால் ஓடமறுக்கிறது. இப்படி தரமற்ற பொருட்களைத் தந்தார். உலக நடப்புகளை தெரிந்துகொள்ள 10 ஆண்டுக்கு முன்பு கலைஞர் தந்த தொலைக்காட்சி பெட்டி இன்றளவும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இன்று நம்மை ஆள்பவர்கள் அப்படி சிந்திக்கும் தலைவர்களாக இல்லை” என்றார்.