கோவையில் இலங்கை அகதிகள் முகாமில் கஞ்சா விற்பனை செய்த இருவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கோவை அருகே பூலுவபட்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாம் மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆலாந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆலாந்துறை போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஆய்வாளர் தங்கம் மற்றும் உளவுப்பிரிவு காவலர் தங்கவேலு தலைமையிலான காவல்துறையினர், இலங்கை அகதிகள் முகாமை திடீர் சோதனையிட்டனர்.
அப்போது அதே முகாமைச் சேர்ந்த ராகன் மற்றும் தினேஷ்வந்த் ஆகியோர் முகாம் மட்டுமின்றி பூலுவப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.