![ர்](http://image.nakkheeran.in/cdn/farfuture/MNaDu04RLgXtFP-QiNFLQCwfL8ktMt-FbM7pAetEz-U/1535630000/sites/default/files/inline-images/ravikumar.jpg)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு இந்துத்துவாவாதிகளால் ஆபத்தா? தமிழக அரசே தக்க நடவடிக்கையையும்- பாதுகாப்பினையும் வழங்குக! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:
’’விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், சிறந்த எழுத்தாளருமான நண்பர் ரவிக்குமார் உயிரைக் குறி வைத்து இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளில் ஒன்று திட்டமிட்டிருக்கிறது என்பது கேரளத்திலிருந்து வந்துள்ள செய்தியாக உலவி வருகிறது!
இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்ல, பொதுவாழ்வில் உள்ள அனைவருமே கவலைப்படுவதோடு, வெட்கமும், வேதனையும் அடைவார்கள் என்பது உறுதி. மாற்றுக் கருத்துகளுக்கு இடம் அளிப்பதுதான் ஜனநாயகத்தின் மாண்புகளில் மிகவும் முக்கியமானது. கருத்துரிமை உயிரினும் மேலானது. அவருக்கு உரிய பாதுகாப்பினை தமிழக அரசு வழங்கிடுவதும், இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களுக்குக் காரணமானவர்களை அறிந்து அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசர அவசியமாகும் என்பதை திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.’’