இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது. தி.மு.க.வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வர மாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொது வாழ்க்கைப் பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம்." இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று நேற்று அறிவித்த நிலையில், தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.
முன்னதாக அரசியல் கட்சித் தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.