திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பொறுப்பேற்ற வி.பி.ஆர்.சிவக்குமார் 5 ஆண்டுக்காலம் பதவி வகித்து நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் 6 மாதக்காலம் அவருடைய பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது. அவருடைய பதவிக்காலம் 09.04.2023 அன்று முடிவுற்ற நிலையில், தொடர்ந்து 2வது முறையாக அவருக்கு 3 மாதக்காலம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது. இதையறிந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் கடந்த 10.04.2023 அன்று மதியம் 1 மணியளவில் பல்கலைக்கழக பெல் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தனியாக கூட்டமைப்பினர் 17ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி திங்கள் கிழமை மதியம் 1 மணியளவில் பல்கலைக்கழக பெல் மைதானம் முன்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் சங்க தலைவர் ராஜா (எ) பிரான்மலை தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் மணிவேல் முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகவடிவு வரவேற்று பேசினார். பேராசிரியர் சங்கத்தினர் வாயில் கருப்பு முகக்கவசம் அணிந்து, கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய போராட்டக்குழு தலைவர் ராஜா, 2வது முறையாக பல்கலைக்கழகப் பதிவாளருக்கு பதவி நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டுமென்றும், பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோசமிட்டதோடு, பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு, திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குழு, கல்வியியல் குழு, நிதிக்குழு ஆகியவற்றின் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்கத்திற்கு நிதிகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், பேராசிரியர்கள் குடியிருப்புகளை முறையாகப் பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை 1 மணியளவில் பெல் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கிளம்பிய பல்கலை. பேராசிரியர் சங்கத்தினர் பல்கலை. நிர்வாக அலுவலகம் வழியாக ஊர்வலமாக வந்து பல்கலை. வளாகத்தில் உள்ள காந்திகிராமம் பல்கலை. நிறுவனர் ராமச்சந்திரன் சமாதியை வந்தடைந்தனர். அங்கு சிறப்பு வழிபாடு செய்த பின்பு பல்கலைக்கழக பதிவாளரை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரையும், புதிய துணைவேந்தரையும் உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு கோரிக்கை மனுவையும் ராமச்சந்திரன் சமாதியில் வைத்தனர்.
இதுகுறித்து பல்கலை. பேராசிரியர் சங்க இணைச் செயலாளர் மணிவேல் கூறுகையில், இந்தியாவின் பெருமைமிகு காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு தற்போது சோதனை காலம் வந்துவிட்டது. பல்கலைக்கழகப் பதிவாளராக பிசியோதெரபி பேராசிரியர் ஒருவரை நியமித்துள்ளனர். இது முற்றிலும் பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு முரணானது. தகுதிவாய்ந்த நபரை பதிவாளராக நியமனம் செய்யும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். எங்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்களும் அலுவலக பணியாளர்களும் வந்தபோது நாங்கள் அவர்களுடைய கல்வி மற்றும் பணி செய்வது பாதிக்கக்கூடாது என்பதற்காக மறுத்துவிட்டோம். தொடர்ந்து எங்களது அறப்போராட்டம் தொடரும் என்று கூறினார்.