கஜா புயலால் கடலூர் மாவட்டத்தில் அதிகமான பாதிப்புகள் இல்லை என்றாலும் கஜா புயல் ஆழ்கடல் பகுதியில் ஏற்படுத்திய தாக்கத்தால் ஆழ்கடல் உயிரினங்கள் கரையொதுங்கியுள்ள காட்சி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக ஆழ்கடல் பகுதி உள்ளது. ஆனால் புயல் ஏற்படுத்திய அதிவேக காற்று சுழலின் காரணமாக ஆழ்கடல் பகுதியில் வாழும் சிப்பிகள், ஆளி, சங்கு போன்றவைகள் கடற்கரையோர பகுதிகளில் ஏராளமாக ஒதுங்கியுள்ளன.
பெரும்பாலும் இந்த வகை உயிரினங்கள் அவ்வளவு எளிதாக கரை ஒதுங்காது. கடலூர் கடற்கரை பகுதிகளில் தொத்திகுப்பம், ராசாபேட்டை என கடற்கரையோர பகுதிகளில் இவ்வகை கடல் வாழ் உயிரினங்கள் ஒதுங்கியுள்ளன.
வழக்கமாக கரை ஒதுங்கும் சங்குகளை விற்பனை செய்யும் மீனவ கிராம மக்கள் இந்த சிப்பி, சங்கு போன்றவைகளை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த பொருட்களைக் கொண்டு பல அழகிய கைவினை பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுவதால் வெளியூரில் இருந்தும் வியாபாரிகள் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
இதுபோன்ற அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குவது நல்லதா…? கெட்டதா…? என தெரியாமல் கடற்கரை பகுதி மக்கள் குழப்பதுடன் பார்க்கின்றனர்.