டீசல், டோல்கேட் கட்டணம், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதாகச் சொல்லி மூன்று மாதத்திற்கு மேலாகியும் மத்திய அரசு கண்டுகொள்ளாததால், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு மீண்டும் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட லாரி அதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலையைக் குறைக்கக்கோரியும், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் டோல்கேட் கட்டணங்களைக் குறைக்கவும் லாரி அதிபர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்காததால் நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகும் மத்திய அரசு மவுனமாக இருந்ததால், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி முதல் தொடர்ந்து எட்டு நாள்கள் நாடு முழுவதும் லாரி அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது லாரி அதிபர்களின் கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மத்திய அரசு இது தொடர்பாக எவ்வித பூர்வாங்க நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
டீசல் விலை தாறுமாறாக எகிறியதால் லாரி தொழிலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, சரக்கு புக்கிங் கட்டணமும் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில், அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிடில் இரு தினங்களுக்கு முன்பு கூடி ஆலோசனை நடத்தினர். மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, தீபாவளி பண்டிக்கைக்குப் பிறகு மீண்டும் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில செயலாளர் தனராஜ் கூறுகையில், ''டீசல் விலையேற்றத்தால் நாளுக்குநாள் லாரி தொழில் நசிந்து வருகிறது. டீசல் விலை இப்போது 80 ரூபாயை நெருங்கிவிட்டது. மத்திய அரசும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எங்கள் கோரிக்கைகள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், தீபாவளிக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம். வேலைநிறுத்தம் போராட்டத்தால், தேசிய அளவில் 70 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகளும் ஓடாது. இதனால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பும் ஏற்படும். அதற்குள், மத்திய அரசு எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.