கன்னியாகுமரியில் கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடல் கொந்தளிப்புடன் இருக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (10.06.2024) மற்றும் நாளை (11.06.2024) ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய கடற்கரையோர மாவட்டங்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக் கடல் காரணமாக 3 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.