பழனி அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று சாக்கடைக்குள் விழுந்ததால் பயணிகள் அலறியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் பழுதுகள் காரணமாக சக்கரங்கள் கழன்று ஓடுவது, மேற்கூரைகள் சேதமடைவது தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. அண்மையில் மயிலாடுதுறையில் அரசு பேருந்து முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வேலப்பன்வலசு பகுதிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடியது. இதில் பேருந்து முன்பக்கம் சக்கரம் அருகிலிருந்த சாக்கடையில் விழுந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறியடித்தபடி கத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 30 பயணிகள் இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.