கல்லணை கால்வாயில் உள்ள ஷட்டர்களை மராமத்து செய்ய ரூ.10 லட்சம் செலவு செய்ததாக வைத்துள்ள பதாகை சாலையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக ஆற்றுக்குள் இறங்கி பார்க்கும் விதமாக வைத்திருப்பதை அந்த வழியாக போவோர் உற்றுப் பார்த்து கமெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.
எந்த ஒரு அரசுப் பணி, மராமத்துப் பணியானாலும் பணியின் பெயர், நிதி ஒதுக்கீடு, பணி தொடங்கிய காலம், முடிவடைந்த காலம், ஒப்பந்தக்காரர் பெயர் முகவரி என அனைத்து தகவல்களுடன் பதாகை வைப்பது வழக்கம். அதே போல தான் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் செல்லும் கல்லணை கால்வாயில் பேராவூரணி வட்டம் ஏனாதிக்கரம்பை (மாயம் பெருமாள்கோயில் பிரிவு சாலை அருகே) தண்ணீர் திறக்கும் ஷட்டர் அருகே கல்லணை கோட்டம் நீர்வளத்துறை மறைத்து வைத்துள்ள பதாகை தான் அனைவரையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரின் பரிந்துரையில் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதி ‘ரூ.10 லட்சத்தில் பேராவூரணி வட்டம், ஏனாதிக்கரம்பை கிராமத்தில் உள்ள கழனிவாசல் நீர்த்தேக்கத்தில் புதிய ஷட்டர்கள் அமைப்புகள் பொறுத்தும் பணி’ ஒப்பந்தக்காரர் எஸ்.ஆர். பேப்ரிக்கேசன்ஸ் புதுக்கோட்டை என அந்த பதாகையில் அச்சிடப்பட்டு சில தகவல்கள் மறைக்கப்பட்ட பதாகை சாலையில் போவோர் பார்த்து விடாமல் ஆற்றுப் பக்கமாக திருப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதாகை ஏன் இப்படி மறைத்து வைத்துள்ளனர். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்று கூறும் விவசாயிகள், நல்லா இருந்த ஷட்டர்களை சில இடங்களில் ஒரு மூட்டை சிமென்ட் கொண்டு வந்து லேசான விரிசலை பூசுனாங்க. ஒரு சட்டர் திருகு இரும்பையும் காணும். சிமென்ட் பூசிய இடத்தில் சுண்ணாம்பு கூட பூசவில்லை. புதுசா ஷட்டர் அமைக்கும் பணி என்று பதாகையில் உள்ளது. இந்த பணிக்கு ரூ.10 லட்சம் செலவா? என்று வாய் பிளக்கின்றனர். மேலும் சீக்கிரமே பதாகை காணாமல் போனாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்கின்றனர். கல்லணை கால்வாய் பணிகள் ஒதுக்கப்பட்ட பணிகள், ஒதுக்கிய நிதியில் சரியாக நடந்துள்ளதா அல்லது பெயர்ப்பலகை அளவில் மட்டும் நடந்துள்ளதா என்பதை நீர்வளத்துறை அதிகாரிகள் தான் சொல்ல வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.