கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? எனத் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். முதலில் வெடி விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகில் இருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு குடோன் அருகில் உள்ள உணவகத்தில் உள்ள சிலிண்டர் வெடித்து பரவிய தீ விபத்தினால் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.