மேகாலய ஆளுநர் இல.கணேசன் உடல்நலம் பெற வேண்டி ஆதி மகாமுனி சிவாலயத்தில் சிறப்பு ஆயுள் ஹோமம் நடைபெற்றது. பூஜைகள் முடிந்த பின் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இல.கணேசன் பூரண குணமடைந்து இந்த தேசத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அவர் முழு ஆரோக்கியத்துடன் எழுந்து வர வேண்டும் என ஆதிசிவன் கோவிலில் ஆயுள் ஹோமம் என்ற ஹோமம் வளர்க்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது” என்றார்.
இதன் பின் திருமாவளவன், இந்து சமய அறநிலையத்துறையை சைவம் மற்றும் வைணவம் என இரண்டாக பிரிக்க வேண்டும் என கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “சீமான், திருமாவளவன், திருமுருகன் காந்தி, ஆ.ராசா போன்றோர் கைலாசா நாடு துவங்கிய நித்தியானந்தா மாதிரி தனி நாடு துவங்கி இந்த கருத்துகளை சொன்னால் நன்றாக இருக்கும்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலையை இவர்கள் காண வேண்டாம் என நான் எச்சரிக்கிறேன். தன் சுய லாபத்திற்காக, தன் சுயநலனுக்காக இந்து மதத்தையும் இந்து தேசத்தையும் பீடிக்க நினைக்கின்ற சக்திகளுக்கு மதுரையில் இருந்து நாங்கள் பாடம் புகட்டுவோம். அதிலும் நான் ஒரு இந்தியன், இந்து என்ற அடிப்படையில் நாங்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் காலம் வரும்.
அரசியல் நாடகம் ஆடி தன் சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் பிறந்த மதத்தை தொடர்ந்து இழிவு படுத்திக்கொண்டே இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோம். நாங்கள் தேசத்தை ஆள்கின்ற இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் தான் பொறுமையாக இருக்கின்றோம். எப்பொழுது நாங்கள் இந்தியன் இந்து என்ற நிலைக்கு வருகிறோமோ அப்பொழுது அவர்கள் நாக்கு உடம்பில் இருக்காது, வெட்டிவிடுவோம் என்பதை இதன் மூலம் சொல்லிக்கொள்கிறோம். இந்து மதத்தினை பிரிக்க நினைக்கும் எந்த தீய சக்தி வந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம் அதற்கு எதிராக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.