நேற்று பரந்தூர் சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை வாகனத்தில் இருந்தபடி பேசுகையில், “கிட்டத்தட்ட 910வது நாட்களுக்கு மேலாக உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசினார். அந்த குழந்தையோட பேச்சு மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்கள் எல்லோரையும் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது.
நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?. உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களுடைய வசதிக்காக அவர்களோடு நிற்கிறதும், அவர்களோடு நிற்காமல் இருக்கிறதும், நாடகம் ஆடுறதும் நாடகம் ஆடாமல் இருக்கிறதும். அது சரி, நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராட ஆரம்பித்தால் பிரச்சனை தான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உங்களுடைய விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்' என தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய்யின் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''மக்கள் பல்வேறு காரணங்களுக்காக போராடுகிறார்கள். ஒருவர் வளர்ச்சி என நினைப்பது ஒருவருக்கு இழப்பாக இருக்கலாம். மக்கள் போராடுகிறார்கள் என்றால் அந்தப் போராட்டத்திற்கு பிறகு கண்ணீரும், வலியும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசு இதை விரைவில் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
போராடும் மக்களோடு பேசி யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஒரு வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது தான் ஒரு அரசாங்கத்தின் கடமை. அதைத்தான் தமிழ்நாடு அரசு செய்கிறார்கள். மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான தொடர்ச்சியான பேச்சில் ஒரு புரிந்துணர்வு ஏற்படும் என நினைக்கிறேன். விஜய்யாக இருந்தாலும் சரி மற்ற அரசியல் கட்சித் தலைவர்களாக இருந்தாலும் சரி போராடுகின்ற மக்களை போய் பார்த்து அவர்கள் தரப்பு நியாயம் என்ன என்பதை கேட்பதுதான் ஒரு அரசியல் கட்சியினுடைய வேலை. விஜய் செய்வது சரி என தமிழ்நாடு அரசாங்கம் புரிந்து கொள்வார்கள்'' என்றார்.