நெடுஞ்சாலை என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. அந்தப்படத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளில் பொருட்களை திருடும் கும்பல்கள் எப்படி திருடுகிறது என்பது குறித்து காட்சிப்படுத்தியிருப்பார்கள். களத்தில் செயல்படும் திருட்டு கும்பல் அதைவிட வித்தியாசமாக லாரிகளில் கொள்ளையடித்து வருகின்றனர். அதாவது பெண்களை தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வாகனங்களை நிறுத்தச்செய்து கொள்ளையடிப்பது, ஓட்டுநர்கள் வாகனங்களை ஓய்வுக்காக நிறுத்திவைக்கும்போது திருடுவது போன்று பல வகைகளில் திருடுகின்றனர். அப்படியொரு கும்பலை தான் பிடித்துள்ளது காவல்துறை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இனோவா கார் ஒன்றை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த காரில் இருந்த நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் சென்னை போரூர் பகுதியை சேர்ந்த டேவிட் சோபி, பரமசிவம், அருண், முத்து என தெரியவந்தது.
இவர்கள் சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளில் ஏறி அதிலுள்ள பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிப்பது தங்கள் தொழில் எனக்கூறியுள்ளனர். அதிகமாக திருடமாட்டோம், வழக்கு பதிவாகாத அளவுக்கு பொருட்களை திருடுவோம், குறைவாகத்தானே திருடு போயிருக்கிறது என அவர்கள் புகார் தரமாட்டார்கள் எனச்சொல்லியுள்ளனர்.
அவர்கள் தந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்த ஒரு இனோவா கார், திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரி, திருடி வைத்திருந்த கோல்டு வின்னர் ஆயில் பாக்கெட் பெட்டிகள், எலக்ட்ரிக் பொருட்கள், ராணுவ வீரர்களின் உடை உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். அதன் மதிப்பு பல லட்சம் என்கின்றனர் போலீஸார். பறிமுதல் செய்த பொருள்களோடு வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.