நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள ஆவுடையப்பனுக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.