நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்து வறட்சியை ஏற்படுத்தும் தனது 2 ஏக்கர் தைலமரக்காட்டை விவசாயி கணேசன் அழித்துள்ளார். நெடுவாசலில் ஒரு விவசாயி தைல மரக்காட்டை அழித்து குருங்காடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதற்கு வரவேற்புகள் கூடி வருகிறது
புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகமான வறட்சியை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் மாவட்டத்தில் இருந்த பெரும்பாண்மையாக இருந்த காப்புக்காடுகளை அழித்துவிட்டு தைலமரக்காடுகளையும், சீமைக்கருவேல மரங்களையும் வளர்த்ததே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. அதனால் வனத்துறை மூலம் வளர்க்கப்படும் பெரும்பாண்மையான தைல மரக்காடுகளை அழித்துவிட்டு பழைய முறையில் காப்புக்காடுகளை வளர்த்தால் வறட்சியை போக்குவதுடன் அழிந்து வரும் வன விலங்குகள், பறவைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஒன்றியத்தில் வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டதால் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் மேலும் ரூ.10 லட்சம் வரை செலவு செய்து ஆயிரம் அடிகள் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தைல மரங்களால் தான் நீர் குறைந்து வருகிறது என்பதை அறிந்த கொத்தமங்கலம் கணேசன் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் பரப்பளவில் நின்ற தைல மரக்காட்டை வேரோடு வெட்டி அழித்துவிட்டார்.
இது குறித்து கணேசன் கூறும் போது..
தண்ணீர் குறைய தைல மரங்கள் தான் காரணம் என்பதை தெரியாமல் 2 ஏக்கரில் தைல மரங்களை வளர்தேன். ஆனால் இப்போது தெரிந்ததும் நானே அழித்துவிட்டேன். என்னை போல விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக தைல மரக்காடுகளை அழிப்பார்கள் என்று நம்புகிறேன். தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் எந்த விவசாயத்தையும் விவசாயிகள் செய்ய வேண்டாம் என்றார்.
அதேபோல நெடுவாசல் கிராமத்தில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்டுள்ள தைல மரக்காடுகளை அழித்துவிட்டு குருங்காடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தண்ணீர் குறைவதையடுத்து அதற்கான காரணிகளான தைல மரங்களையும், சீமைக்கருவேல மரங்களையும் விவசாயிகளே முன்வந்து அழிக்க தொடங்கி இருப்பது நல்ல முன்னுதாரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும் இதேபோல ஒவ்வொரு விவசாயியும் முன்வர வேண்டும். அப்போதுதான் நம்மை நாம் காக்க முடியும் ஆனால் அரசாங்கம் காப்புக்காடுகளை அழித்துவிட்டு தைல மரக்கன்றுகளை நட்டு வருவது தான் அரசாங்கமே வறட்சியை ஏற்படுத்துவது போல உள்ளது என்கின்றனர் வேதனையுடன்.