திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று (25.08.24) ஞாயிற்றுக்கிழமை என்பதால் பழனி ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் முருகன் மாநாட்டை காண மாநாட்டு பந்தலை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர். பொதுமக்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் அமர்வதற்கு தற்காலிக செட்டில் இருக்கைகள் ஏற்படுத்தி பாதுகாப்புடன் மாநாட்டு பந்தலுக்கு அனுப்பி வருகிறனர். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளில் செய்து கொடுத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதனிடையே பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் இருந்து இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் மற்றும் அவர்களது குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாநாட்டை காண்பதற்காக வருகை தந்தனர். இது சம்பந்தமாக பாத்திமா என்ற இஸ்லாமிய பெண் கூறுகையில், ‘நான் மாநாட்டிற்கு எதுவும் சென்றதில்லை. இந்த மாநாட்டை காண்பதற்காக வருகை தந்தேன். வேற்று மதத்தை சேர்ந்த என்னை இங்கு உள்ள பொதுமக்கள் யாரும் மாற்று மதத்தினர் என கருதாமல் என்னை அவர்களுடன் ஒருவராக பார்த்தனர். மாநாட்டு பந்தலுக்குள் அனைவரையும் போல் நானும் மாநாட்டு பந்தலுக்கு வருகை தந்து மாநாட்டை காண உள்ளேன்’ எனத் தெரிவித்தார். முருகன் மாநாட்டை காண்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளதாகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.