அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உட்பட 6 பேருக்கு எதிரான வழக்கை விசாரித்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன், கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபரை மிரட்டி பட்டாசு ஆலையைத் தனது நண்பரின் மனைவி பெயரில் கிரயம் செய்ததாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிவகாசி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து மாரியப்பனும் சேர்க்கப்பட்டார். தனக்கு எதிராகப் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முத்து மாரியப்பன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதால் காவல் உதவி ஆய்வாளர் முத்து மாரியப்பன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் விசாரணையில் தலையிட விரும்பவில்லை எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உட்பட 6 பேருக்கு எதிரான வழக்கை காவல்துறை விசாரித்து 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.