நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார். 'திசைகளை எல்லாம் வெல்லப் போவதற்கான முதற்கதவு திறந்திருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கையை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம்' என விஜய் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக நிர்வாகிகளை அறிவிக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் செஞ்சி ராமச்சந்திரனை கட்சியின் அவைத் தலைவராக கொண்டு வர தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.
தொடர்ந்து வரும் 23 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு ஏற்பாடுகளில் கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த 4 பேர் தவெகவில் இணைந்து மாநாடு மேடையை அலங்கரிக்க இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.