கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிவராமனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக இவர் இந்த வழக்கில் சிக்கிய நிலையில் சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமனைத் தப்பிக்க உதவிய அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகிய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையில் உள்ள என்.சி.சி. தலைமை இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது . இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்ட சிவராமன் என்ற நபருக்கும் என்.சி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் தொடர்புடைய அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கவும் ஆணையிட்டுள்ளார். இந்த விசாரணையைத் துரிதமாக மேற்கொண்டு 15 நாட்களில் அனைத்து விதமான நடவடிக்கையும் முடிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பல்நோக்கு குழு தமிழகத்தில் மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.