தமிழக சட்டமன்றத் தோ்தல் நடைபெற உள்ள இந்த பரபரப்பான சூழலில் தோ்தல் விதிமுறைகளும், கட்டுபாடுகளும் சாமானியனை வெகுவாய் பாதிப்படையச் செய்துள்ளன. ஒருபக்கம், ஆங்காங்கே பரிசோதனை என்ற பெயரில் பணம் மற்றும் பொருட்களை தோ்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துவருகிறது என வியாபாரிகள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் நேற்று (09.03.2021) இரவு திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள விமான நிலைய சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் கே.பி.என் பார்சல் சர்வீஸ் லாரியை சோதனை செய்ததில் 300 சில்வா் தூக்குவாளிகள் இருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அனைத்தையும் உடனடியாக பறிமுதல் செய்துள்ளனா்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பலதரப்பட்ட வணிக வளாகங்கள் அதிகம் உள்ள நிலையில், பாத்திர கடைக்கு கொண்டு செல்லப்பட்ட வாளிகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாளிகள் மற்றும் கேபிஎன் பார்சல் சர்வீஸ் லாரியையும் கிழக்கு சட்டமன்றத் தோ்தல் அதிகாரி துணை தாசில்தார் சுமதி உள்ளிட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். மேலும் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெற்று வருகிறது.