திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது.
சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் நூற்றாண்டு விழாவை கலை உலகம் கொண்டாடியதற்கு மிகவும் நன்றி. எங்கள் குடும்பமே கலைத்துறை சார்ந்த குடும்பம் தான். நானும் கலைத்துறையைச் சார்ந்தவன் தான். 1947 இல் முதல் படம் ராஜகுமாரி தொடங்கி 2007இல் பொன்னர் சங்கர் வரை மொத்தம் 65 ஆண்டு காலம் கலைத்துறையில் இருந்தவர் தான் கலைஞர்.
திரைப்படங்களில் மு.கருணாநிதி என்ற பெயர் இருந்தாலே அந்த திரைப்படம் வெற்றிபெறும். கலைஞர் மறைந்த நேரத்தில் அனைத்து தரப்பு மக்களும் புகழஞ்சலி செலுத்தியது வரலாறாக இருந்தது. இந்த நூற்றாண்டு விழாவின் மூலம் பூந்தமல்லியில் ரூ.540 கோடி மதிப்பில் நவீன பிலிம் சிட்டி அமைக்கப்படவுள்ளது. புரொடக்சன், போஸ்ட் புரொடக்சன், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அந்த பிலிம் சிட்டி அமைக்கப்படும். மேலும் எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் ரூ. 25 கோடியில் 4 படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும்” என்று கூறினார்.