![Flooding in many places along the Cauvery coast!](http://image.nakkheeran.in/cdn/farfuture/x7nlNKU4WHUqFxYG5do0kZNX9NJVsTEYOreICajrPzs/1659617731/sites/default/files/inline-images/n322.jpg)
சேலம் ஏற்காடு பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிந்து வந்த நிலையில் இன்று பிற்பகலில் மரப்பாலம் என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் நாகலூர், செம்மநத்தம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்தப்பகுதி மக்கள் உள்ளனர்.
அதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுவதால் கரையோரத்தில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எம்.ஜி.ஆர் நகர், அண்ணா நகர், பழைய மார்க்கெட் பகுதிகளில் நேற்றிலிருந்தே பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் நிர்வாகம் தரப்பில் நகராட்சி பள்ளி, திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்த பொழுதும் மக்கள் அங்கே செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை.
![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/dGSKPTQmpaXOw4pdGCFzPVQ91E7Z-VSan6pDi_EU4s4/1659617887/sites/default/files/inline-images/n323.jpg)
இதேபோல் ஈரோட்டில் காவிரி நீர் ஊருக்குள் புகுந்த நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் சிலர் வீட்டுக்கு வெளியிலேயே தூண்டிலில் மீன் பிடித்தனர். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கீழக்கரை பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிற நிலையில் அப்பகுதி மக்கள் இப்படி அசாதாரணமாக நடந்து கொள்வது திகைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி ஆகிய இடங்களுக்கு யாரும் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.