நடுக்கடலில் மாயமான நாகை மீனவர்களைத் தேடும் பணியில் விமானம் மற்றும் கப்பல் ரேடார் மூலம் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் என்று வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற படகு, டவ்-தே புயலில் சிக்கி, கேரளா அருகில் நடுக்கடலில் படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் மாயமானார்கள். இதுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்கிற பதைபதைப்பு மீனவர்கள் மத்தியில் இருக்கிறது. மீனவர்கள் மீட்கப்படாத காரணத்தால் அந்த கிராமமே சோகக் காடாகி கிடக்கிறது.
இந்நிலையில், சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திற்கு வந்த ஓ.எஸ். மணியன், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், அதிமுக சார்பாக பாதிக்கபட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கினார்.
பின்னர் பேசிய மணியன், "நடுக்கடலில் காணாமல் போன நாகை மீனவர்களைத் தேடும் பணியில் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும். மீனவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவந்தாலும், தீவிர முயற்சி எடுக்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கான பணிகளை பிரதமர் மோடி முடுக்கிவிட வேண்டும்.
மேலும், மத்திய அரசு முழுவீச்சில் வான்வெளி தேடுதலையும், கடல்வழித் தேடலையும், ரேடர் போன்ற அதிநவீன கருவிகள் வசதிகளையும், விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மீனவர்களை மீட்க வேண்டும்" என மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.