சிறையிலுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப பாதுகாப்பு நிதியாக தினசரி ரூ.1000மாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முன் வைத்துள்ளனர் இராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடல்தொழிலாளர் சங்கத்திடமிருந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ்விடம் வைத்த கோரிக்கையிலிருந்து., " சீன இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுக்க தவறியதால் இன்று ஒத்தை மடியை பயன்படுத்தி மீன்பிடிக்க இயலாது போய்விட்டது. இதனால் ஒட்டு மொத்த மீன்பிடி தொழிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் வேறு வழியின்றி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறிப்பாக பாரம்பரிய மீன்பிடிப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீனவர்கள் அதிக அளவில் அரபு நாடுகளுக்கு சென்று எவ்வித தொழில் பாதுகாப்பும் சட்ட பாதுகாப்பும் இன்றி தொழில் செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில் மீன்பிடி ஒப்பந்த கூலிகளாக கடந்த 01/09/2018 அன்று அரபுநாடான துபாய் நாட்டில் சுமைராஎன்ற இடத்தில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவை சேர்ந்த 5 மீனவர்களும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணத்தை சேர்ந்த ஒரு மீனவருமாக 6 மீனவர்கள் கடலுக்கு சென்றவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டு அவர்கள் சென்ற படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர் .
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தமிழக அரசானது அவர்கள் குடும்ப வறுமை நிலையை கணக்கில் கொண்டு அவர்கள் சிறையில் இருக்கும் காலத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக நாளொன்றுக்கு ரூபாய் 250வீதம் வழங்குகிறது. ஆனால், பெருமளவில் பணம் செலவு செய்து விசா பெற்று அரபு நாடுகளுக்கு தொழில் செய்ய செல்லும் நம் மீனவர் குடும்பத்தினருக்கு இதுபோன்று குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க படுவதில்லை.2013 முதல் 2016 முதல் முன்னாள் முதல்வர் அவர்கள் இதுபோன்று பாதிப்புக்குளான மீனவர் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதல் 5.லட்சம் வரை சிறப்பு நிவாரண நிதியாக வழங்கி உதவினார். ஆனால் அவர்கள் மறைவுக்கு பிறகு இது போன்ற சிறப்பு நிதி வழங்கபடுவதில்லை. கேட்டால் மத்திய அரசின் தணிக்கை துறை இதை அனுமதிக்கவில்லை என்று சொல்கின்றனர். ஜெ-வின் ஆட்சி நடத்துவதாக கூறுபவர்களால் ஜெ. வழங்கியது போன்று வழங்க இயலாமல் போனது ஏன் என்று புரியவில்லை. குறைந்த பட்சம் குடும்ப பாதுகாப்பு நிதியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதமாவது வழங்க வேண்டும் . அதுவும் ஜெ. அவர்கள் மறைவுக்கு பிறகு இது போன்று கைது நடவடிக்கைக்கு உள்ளாகி விடுதலையான மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.. இதனை தமிழக அரசும் தமிழக மீன்வளத்துறையும் இதை பரிசீலிக்க வேண்டுமெனவும்" வேண்டுகோள் விடுத்துள்ளனர்.