தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்துதல் மற்றும் தீ விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று (08.11.2023) ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேயர் பிரியா ராஜன் பேசுகையில், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகளை தனியாக அதற்கான வைக்கப்பட்டுள்ள பைகளில் சேகரித்து, முறையாக பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் கனரக வாகனங்களை இப்பணிகளுக்காக ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தினந்தோறும் சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அன்றைய தினமே சாலை மற்றும் தெருக்களில் இருந்து அப்புறப்படுத்தி, பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னர் இந்தக் கழிவுகள் முறையாக கும்மிடிப்பூண்டியில் உள்ள நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
குப்பை கொட்டும் வளாகங்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுத்திட தீயணைப்புத் துறையின் மூலம் தகுந்த பாதுகாப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அரசின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நேரத்தில் தகுந்த பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடித்திட வேண்டும். பட்டாசுக் கழிவுகளை தனியே சேகரித்து, அதனை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.