Published on 06/11/2021 | Edited on 06/11/2021
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த இருபத்தி ஆறாம் தேதி செல்வகணபதி என்பவரது பட்டாசு குடோனில் மின்கசிவு ஏற்பட்டு, பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. அதோடு அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. நான்கு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் எட்டு அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனது, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து விபத்துக்குக் காரணமான பட்டாசுக் கடை உரிமையாளர் செல்வகணபதி மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வகணபதி சிகிச்சை முடிந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.