விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ளது ஆவணிப்பூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த தாஸ் என்பவரது மகன் ஹரி ராஜன் வயது 26. இவர் சம்பவத்தன்று இரவு, திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து பைக்கில் தன் ஊருக்கு செல்வதற்காக வந்துகொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற இரண்டு திருநங்கைகள், திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் தீயணைப்பு நிலையம் எதிரே ஹரி ராஜனை வழிமறித்து அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
பின்னர், அந்த இரு திருநங்கைகளும் இளைஞர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு அவரை தாக்கி குப்புற தள்ளிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். ஒருவழியாக தட்டுத்தடுமாறி எழுந்த ஹரிராஜன், திண்டிவனம் காவல் நிலையத்திற்குச் சென்று திருநங்கைகள் குறித்து புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். மேலும், டி.எஸ்.பி. கணேசன், திருநங்கைகளைக் கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து செயின் பறித்துச் சென்ற திருநங்கைகளை அடையாளம் கண்டுகொண்டு தேடிவந்தனர்.
தீவிர விசாரணையைத் தொடர்ந்து, புதுச்சேரி அருகே உள்ள ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது திருநங்கையும், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 28 வயது திருநங்கை ஆகிய இருவரும் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்தத் திருநங்கைகளைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹரி ராஜனிடம் 2 பவுன் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஹரிராஜன் பறிகொடுத்த 2 பவுன் செயினையும் பறிமுதல் செய்தனர். கைதான இரண்டு திருநங்கைகளையும் அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.