விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள விஜயகரிசல்குளத்தின் கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை மஞ்சள் ஒடைப்பட்டிக் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. டி.ஆர்.ஒ.வின் உரிமப் பெற்ற இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணிகள் அங்குள்ள ஆறு அறைகளில் நடந்து வருகிறது. வழக்கம் போல் இன்று காலை சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு, தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அது சமயம் பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மருந்துகளின் கலவைப் பணியில் கருப்பசாமி மற்றும் செந்தில் ஆகிய இரண்டு பேரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராமல் ஏற்பட்ட உராய்வின் காரணமாகத் தீப்பிடித்து பெருத்த ஒசையுடன் வெடித்ததால் அறைகள் தரை மட்டமாயின.
இதில் துரதிருஷ்டவசமாக பட்டாசுத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மஞ்சள் ஒடைப்பட்டியைச் சேர்ந்த முனிசாமி, கண்ணன், குடும்பபட்டியைச் சேர்ந்த காசி, கொம்மிங்காபுரத்தின் பெருமாள், சரஸ்வதி, அய்யம்மாள், விஜயகரிசல்குளத்தின் செந்தில், கருப்பசாமி உள்ளிட்ட 7 பேர் இதில் சிக்கிப் படுகாயம் அடைந்தனர்.
தொடர்ந்து தகவலறிந்த சாத்தூர் வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர். படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்கள் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செந்தில், கருப்பசாமி, காசி ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து. 2 பெண்கள் உட்பட 4 பேர் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சூழலில் மேல் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்த முனியசாமி மதுரை அரசு மருத்துவமனைக்கும், கோவில்பட்டியில் சிகிச்சை பெற்று வந்த அய்யம்மாள், சரஸ்வதி இருவரும் பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 3 பேர் பலியான பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.