வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்துர் ரோடு, நத்தம் கிராமத்தில், அண்ணாமலை செட்டியார் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் குடியாத்தத்தைச் சேர்ந்த நசீர் பாஷா என்பவர் பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்புகிடங்கு வைத்துள்ளார்.
மார்ச் 23ந்தேதி மாலை 5.30 மணிக்கு பிளாஸ்டிக் கிடங்கு அருகே உயர் மின் அழுத்த வயர் அறுந்து விழுந்துள்ளது. அறுந்து விழுந்த வேகத்தில் இரண்டு வயர்கள் உரசியதால் ஏற்பட்ட தீப்பெறியால் அந்த நிலத்தில் இருந்த காய்ந்த தென்னை கீற்றில் பட்டு தீ பற்றியது. இந்த தீ மளமளவென பிடித்து அருகில் இருந்து பிளாஸ்டிக் கிடங்கு பரவி பரவி எரிந்தது.
இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் குடோனுக்காக அமைக்கப்பட்ட மின் டிரான்ஸ்பார்மர் மற்றும் தென்னந்தோப்பில் இருந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகின. தீ பற்றிய நேரத்தில் அங்கிருந்த ஊழியர்கள் தப்பியதால் உயிர்ச்சேதம் எதுவுமில்லை.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து குடியாத்தம் நகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தீவிபத்து தேர்தல் பரப்புரைக்காக குடியாத்தம் வந்துயிருந்த எடப்பாடி. பழனிச்சாமி பேசிய இடத்திற்கு மிக அருகில் இருந்ததால் பரபரப்பு அதிகமாகிவிட்டது.