தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் பாலமுருகன். இவர் சம்பவத்தன்று குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பாலமுருகன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காதலிப்பதை அறிந்த பாலமுருகன், மறைந்து இருந்து தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்து கொண்டார்.
தனது செல்போனில் எடுத்த அந்தப் படத்தை, தனது நண்பரும் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ள சசிகுமாரின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார். இருவரும் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
போலீஸ்காரர் சசிகுமார் மேல புதுக்குடி கோவிலுக்கு சென்று, அங்கு வந்த காதல் ஜோடியை வழிமறித்து, ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டினார். அந்த வாலிபர் தன்னிடம் பணம் இல்லை என்றதும், எப்படியாவது பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் சசிகுமார், அந்த சிறுமியை பிடித்து வைத்துக்கொண்டு, யாரிடமாவது வாங்கிக்கொண்டு வா என்று அந்த வாலிபரை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபர் பணத்தை எடுத்து வரச் சென்றார். அப்போது சசிகுமார், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் திரும்பி வந்த அந்த வாலிபர், தன்னால் ரூ.5 ஆயிரம் மட்டுமே கடன் வாங்க முடிந்தது என்று தெரிவித்து அந்தப் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சசிகுமார் தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டி அவர்களை அனுப்பி வைத்தார். போலீஸ்காரர் மிரட்டியதைப்போலவே பாலமுருகனும் தனது செல்போனில் உள்ள புகைப்படத்தை காண்பித்து, அந்த சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ்காரர் சசிகுமார், பாலமுருகன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.