காஞ்சிபுரத்தில் ஹோட்டல் ஒன்றில் காவலர் ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் கரோனாவைக் காரணம் காட்டி ஹோட்டல் நிர்வாகத்திற்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9ஆம் தேதி காவலர் ஒருவர் இலவசமாக சாம்பார் கேட்டதாகவும், அதற்கு ஹோட்டல் நிர்வாகம் இலவசமாக சாம்பார் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்தநாள் அந்த ஹோட்டலில், தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை எனக் கூறி உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அப்பொழுது அங்கு இருந்த காவலர் (சாம்பார் கேட்டதாகக் கூறப்படுபவர்) 500 ரூபாய் அபராதம் போதாது, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என பரிந்துரைத்ததின் பேரில் 10 மடங்கு அபராதமாக 5,000 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த அபராதம் விதிப்பு தொடர்பாக காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் அந்தப் பகுதி வியாபாரிகள் சங்கதினர் புகாரளித்த நிலையில், தான் இலவசமாக சாம்பார் கேட்கவில்லை, 10 ரூபாய்க்குத்தான் சாம்பார் கேட்டதாக சம்பந்தப்பட்ட காவலர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.