நாமக்கல் அருகே, ஈழத்தமிழர் அகதி முகாமில் இரண்டு கோஷ்டியினர் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே எம்.மேட்டுப்பட்டியில் ஈழத்தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (55). இவருடைய மகன் தினேஷ்குமார் (28). கடந்த ஜூன் 30ஆம் தேதி இரவு, முகாம் அருகே ஒரு சரக்கு வாகனத்தில் தினேஷ்குமார் வந்துகொண்டிருந்தார். அப்போது அதே முகாமைச் சேர்ந்த துஷ்யந்தன் (20) மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேர் சாலையின் ஓரமாக நின்றனர்.
தினேஷ்குமாருக்கும், துஷ்யந்தன் தரப்பினருக்கும் இடையே திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் வாள், கத்தியால் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ஸ்ரீதரன், துஷ்யந்தன், தினேஷ்குமார் ஆகிய மூவருக்கும் கத்திக்குத்து காயம், அரிவாள் வெட்டு ஏற்பட்டது.
கூச்சலைக் கேட்டு சம்பவ இடம் ஓடி வந்த முகாம்வாசிகள், அவர்களை விலக்கிவிட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் தகவல் சொல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்குள் ஏறி அமர்ந்த துஷ்யந்தனை, திடீரென்று வெளியில் இருந்து வந்த மர்ம நபர்கள் சிலர், அவரை தாக்கத் தொடங்கினர். இதில் மேலும் பலத்தக் காயம் அடைந்த துஷ்யந்தன், உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மற்ற இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். முதற்கட்டமாக தாக்குதலில் ஈடுபட்டதாக 5 பேரை பிடித்து விசாரித்துவருகின்றனர். இருதரப்புக்கும் முன்விரோதம் ஏதும் இருந்ததா? எதனால் மோதல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள துஷ்யந்தன், மயூரான், ஜெயபாலன், தேவரூபன், சீனு, நேசன், சந்தோஷ்குமார், தினேஷ்குமார், ஸ்ரீதரன், பூவேந்திரன், கார்த்தி, செல்வராஜ், ரவி, ஜான்சிராணி, வசந்தி, பிரதிபா, மாலினி என இரு தரப்பிலும் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.