Skip to main content

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி; கலைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு! 

Published on 17/01/2025 | Edited on 17/01/2025

 

தமிழ்நாட்டின் கலை பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல் உள்ளிட்ட 18 இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி (14.01.2025) முதல் இன்று (17.01.2025) வரை என 4 நாட்கள் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற்றது.

முன்னதாக சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை மேளம் அடித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 13ஆம் தேதி (13.01.2025) தொடங்கி வைத்தார்.  இத்தகைய சூழலில் தான் சுமார் 1500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா  நிகழ்ச்சியில் பங்காற்றினர். மொத்தமாக 75 குழுக்களாகப் பிரிந்து 50 கலை வடிவங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்வில் பங்கேற்ற கிராமிய கலைஞர்கள் 1500 பேருக்கும் ஒருநாள் சம்பளம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகர் கோபுரப் பூங்காவில் (TOWER PARK) நடைபெற்ற சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவின் கலை நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா எனப் பலரும் கலந்துகொண்டனர். அதோடு விழுப்புரம் கை கொடுக்கும் கை குழுவினரின் மல்லர் கம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட கலைஞர்களுக்கும், பம்பை இசைக் குழுவினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 

சார்ந்த செய்திகள்