Skip to main content

“உணர்வுகள் வெளிப்படலாம்” - ஜெய் ஸ்ரீராம் குறித்து அண்ணாமலை 

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

“Feelings may emerge” - Annamalai on Jai Sriram

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் நேற்று(14ம் தேதி) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

 

இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள்,‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்’என கோஷம் எழுப்பினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். 

 

“Feelings may emerge” - Annamalai on Jai Sriram

 

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்தும், மைதானத்தில் ஏற்பட்ட கோஷம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் என்றால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கிளம்பினார். 

 

“Feelings may emerge” - Annamalai on Jai Sriram

 

பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியா எப்போதும் அதிகபட்சமான மரியாதையையும், கௌரவத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் 13 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபோது எழுந்து நின்று வரவேற்ற மண் இது. ஐதராபாத்தில் இரு முறை பாகிஸ்தான் விளையாடியுள்ளது. அந்த இரு முறையும் அர்ப்புதமான வரவேற்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. 

 

நேற்று அகமதாபாத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவும், மரியாதையும் கொடுத்த நிறைய இந்தியர்கள் இருந்தார்கள். ஒரு பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டுள்ளனர். இது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக நான் பார்க்கவில்லை. அவர்கள் ஒரு கோஷம் போடுகின்றனர் அவ்வளவுதான். பாகிஸ்தான் வீரர்கள் இந்திய விமானநிலையத்தில் வந்து இறங்கியதில் இருந்து மிகப் பெரிய வரவேற்பை கொடுத்துவருகிறோம். நம்மை பொறுத்தவரை விளையாட்டை விளையாட்டாகத் தான் பார்க்கிறோம். சில நேரங்களில் உணர்வுகள் வெளிப்படலாம்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்