கோவை சாய்பாபா காலனி பகுதியில் வீட்டில் வளர்த்து வந்த வெளிநாட்டு வகை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியை சேர்ந்தவர் பாலாஜி தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது வீட்டிலேயே வெளிநாட்டு வகை நாய்களை இனவிருத்தி செய்து விற்பனை செய்துவரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு 6 வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பாலாஜி தனது மனைவியுடன் கடைக்கு சென்றபோது வீட்டில் தனது இரண்டு குழந்தைகளையும் தனியே விட்டுச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்புறமுள்ள கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நீமோ மேத்யூ என்ற வகை நாய்கள் தொடர்ந்து குறைந்து கொண்டிருந்ததை கண்ட அடுத்து வீட்டில் இருந்த சிறுவன், கூண்டை மெதுவாக திறந்துள்ளான்.
அப்போது திடீரென கூண்டிலிருந்து வெளியே வந்த ஒரு நாய் அங்கு நின்று கொண்டிருந்த சிறுமியை சற்றும் எதிர்பாராத வகையில் கடித்து குதறியது. அதனால் அச்சிறுமி கதறிய சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி சிறுமியை மீட்டனர். தொடர்ந்து படுகாயங்களுடன் துடித்த சிறுமியை உடனடியாக கோவை சாய்பாபா காலனி சந்திப்பு பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே குழந்தையின் பெற்றோர் உரிய உரிமைகளுடன் மருத்துவ சான்றுகள் பெற்று உயர் ரக நாய்கள் விற்பனை செய்து வருவதாகவும் எனவே வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதையடுத்து காவல்துறையினர் எவ்வித வழக்குப்பதிவும் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.