தருமபுரி மாவட்டம் மாரவாடி கிராமத்தில் பெற்ற தந்தையிடம் குடிக்கக்கூடாது என சத்தியம் வாங்கிய பின்னரும் தந்தை குடித்ததால் 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரவடி கிராமம் ஜோதி நகரை சேர்ந்த முருகன்-பூங்கொடி தம்பதிக்கு ரஞ்சினி, கனிமொழி என்ற இருமகள்கள் உள்ளனர். லாரி டிரைவரான முருகன் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் மது அருந்தவே செலவு செய்துவந்தார். இந்நிலையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் கடைசி மகளான கனிமொழி ''அப்பா இனி குடிக்கக்கூடாது'' என ''என் தலைமேல் சத்தியம் செய்யுங்கள்'' என தந்தை முருகனிடம் சத்தியம் வாங்கியுள்ளார்.
சத்தியம் செய்துள்ளதால் அந்தகட்டுப்பாட்டின் காரணமாக கடந்த 3 மாதமாக முருகன் குடிக்கவில்லை இதனால் மகிழ்ச்சியாகவே இருந்துவந்தனர். திடீரென முருகன் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கனிமொழி அப்பாவிடம் சத்தியத்தை மீறியும் ஏன் குடித்தீர்கள் என சண்டை போட்டுள்ளார். அதற்கு தந்தை முருகனோ இன்று ஒருநாள் மட்டும் குடித்துக்கொள்கிறேன் இனி குடிக்கமாட்டேன் என கூறிவிட்டு கையில் வைத்திருந்த மதுபாட்டிலில் உள்ள பாதி மதுவை வைத்துவிட்டார். இதனால் சரி இனி குடிக்கமாட்டார் என நம்பிக்கையுடன் இருந்தார் மகள் கனிமொழி மேலும் நீங்கள் குடித்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் எனகூறியிருந்தார்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கனிமொழி தனது சொல்பேச்சை கேட்காமல் சத்தியத்தையும் மீறி மீண்டும் தந்தை குடித்ததால் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தாளிட்டு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரை காப்பாற்ற உடனடியாக அவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே கனிமொழி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.