தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பாசன வாய்க்கால்களை தூர் வாரிடக் கோரி சிதம்பர பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள வயலூர் முதல் லால்புரம் வரை உள்ள வடக்கு பூதங்குடி கிளை வாய்க்கால்கள் மற்றும் வயலூர் முதல் லால்புரம் வரை உள்ள சிவகாமசுந்தரி ஓடை உள்ள பாசன வாய்கால் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரிட வேண்டும் என்று விவசாயிகள் பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் புதன்கிழமை இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அணியான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் சிதம்பரம் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர நிர்வாகி தமிமுன் அன்சாரி, விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி 10 தினங்களுக்குள் வாய்கால்கள் தூர்வாரிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.