
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் அவர்கள் மாவட்டங்களில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கீழக்கரை வாக்குசாவடி மையங்களை ஆய்வு செய்ய வந்தபோது வழியெங்கும் மணல், ஜல்லி, சிமெண்ட், கட்டிடக் கழிவுகள் போன்றவை ரோட்டில் கொட்டிக் கிடந்ததால் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றிருந்தனர். மாவட்ட ஆட்சியரும் அப்படியே வாகனத்தை விட்டுவிட்டு ஆய்வு நடத்தினார்.
ஆய்வை முடித்துவிட்டு நகராட்சி அலுவகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையாளர் எங்கே என்று கேட்க அங்கிருந்த மற்ற ஊழியர்கள் இப்பொழுதுதான் வெளியே சென்றார் எனக் கூறினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த நகராட்சி பொறியாளரிடம் ஊரில் இருந்துகொண்டு என்ன செய்கிறீர்கள் ஊர்முழுவதும் ஆக்கிரமிப்பும், ஆங்காங்கே மணலும், ஜல்லியும் கொட்டி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனத் தெரியாதா. நீங்கள் வெளியே சென்று பார்வையிடுகிறீர்களா இல்லை அலுவலகத்தில் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களா எனக் கேட்டதுடன், உடனடியாக கட்டிடம் கட்டுபவர்களை அழைத்து ரோட்டில் கொட்டியுள்ள மணல், ஜல்லி போன்றவற்றை உடனே அகற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்தார்.