தர்மபுரி அருகே, விவசாயி ஒருவருக்கு புதிய மின் இணப்பு வழங்க 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் உதவி பொறியாளர் உள்பட இரண்டு பேரை ஊழல் ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நடப்பனஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி மாது. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சாமந்தி பயிரிட்டுள்ளார். தன் விவசாய நிலத்திற்கு புதிதாக மின் இணைப்பு பெறுவதற்காக இண்டூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார்.
இந்நிலையில், மின்வாரிய உதவி பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோரை மின் இணைப்பு பெறுவது தொடர்பாக விவசாயி மாது அணுகியபோது, புதிதாக மின் இணைப்பு பெற வேண்டுமெனில் 11 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இதையடுத்து முதல்கட்டமாக மாது 4 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். வேலை முடிந்ததும் பேசியபடி மீதமுள்ள பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அதன்பிறகும் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். இதையடுத்து மாது, மின்வாரிய அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டது குறித்து ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார்.
காவல்துறையினரின் ஆலோசனைப்படி வெள்ளிக்கிழமையன்று (பிப். 14) இண்டூர் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்ற மாது, ஏற்கனவே கொடுப்பதாக ஒப்புக்கொண்ட லஞ்சப்பணத்தை உதவி பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமியிடம் கொடுத்தார். அவர்கள் இருவரும் பணத்தை வாங்கியபோது, அங்கே சாதாரண உடையில் ரகசிய கண்காணிப்பில் இருந்த ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மாதுவிடம் இருந்து பெற்ற லஞ்சப்பணம் 7 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். அந்தப்பணத்தில் காவல்துறையினர் ரசாயன பொடி தடவி கொடுத்து அனுப்பி இருந்தால், விரல் ரேகை தடயங்களுடன் மின்வாரிய அதிகாரிகள் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், தளவாய் அள்ளியைச் சேர்ந்த விவசாயி மருது என்பவருக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக அவரிடம் இருந்தும், அவ்விரு அதிகாரிகளிடமும் சம்பவத்தன்று காலையில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதை மருதுவும் ஒப்புக்கொண்டார்.
''ஏற்கனவே தர்மபுரி மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயமே படுத்துருச்சு. போயும் போயும் விவசாயிகளிடம் கூடவா லஞ்சம் வாங்குவீங்க?,'' என்று பெண் அதிகாரியைப் பார்த்து ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் கீழே குனிந்தபடியே இரு ந்தார். பிடிபட்ட இருவரும் இதுவரை எத்தனை விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கியிருக்கிறார்கள்? யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் வசூலித்துள்ளனர்? இதில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச வழக்கில் பெண் அதிகாரி உள்பட இருவர் சிக்கியது மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.