ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைக்கு வந்தால் டெல்டா மாவட்டங்களில் குறைந்தது 15 லட்சம் பேர் வேலைகளை அகதிகளாக மாறும் அபாயம் ஏற்படும், மீனவர்களும் விவசாயிகளும் குடும்பத்துடன் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
காவிரி படுகையை இரண்டு மண்டலங்களாக பிரித்து 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா, ரிலையன்ஸ் மற்றும் ஓன்,ஜி,சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக விவசாயநிலங்களை கையகப்படுத்தும் பணியில் நிறுவனங்கள் இறங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், விவசாயிகளும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மீனவர்களும் போராட்டத்தில் குதித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.
![Farmers and fishermen preparing for protest ;'hydrocarbon project' that will turn 15 lakh people into work](http://image.nakkheeran.in/cdn/farfuture/SRv1Kr__zQvtnP9OjV8SkNpUC3kr05nQ5b3PAcaHzKY/1579611674/sites/default/files/inline-images/b_5.jpg)
இந்த நிலையில் ஏற்கனவே நான்கு முறை ஏலம் நடத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்தாவது ஏலத்திற்கான இடத்தையும் அதற்கான தேதியை அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கான வரையறையையும் மாற்றியிருக்கிறது மத்திய அரசு. அந்த மாற்றத்தின்படி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோ, மக்கள் கருத்துக்கேட்போ தேவை இல்லை என்று கூறி வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழியை தளர்த்தி இருக்கிறது மத்திய அரசு. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி மீனவர்களும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
![Farmers and fishermen preparing for protest ;'hydrocarbon project' that will turn 15 lakh people into work](http://image.nakkheeran.in/cdn/farfuture/XCJkJ1gW2PWVstoBn4S4329r7sOnB7EnT9gr_NL-ZEg/1579611703/sites/default/files/inline-images/extra_030117052311.jpg)
இதுகுறித்து தமிழக மீனவர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசினோம்," ஹைட்ரோ கார்பன் திட்டம் கடலோரப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டால், மீனவர்கள் பகுதியில், மீன்பிடித் தொழிலை செய்யமுடியாது. எனவே திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக இணைந்து நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்," என்கின்றனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனோ," காவிரிப்படுகையில் அதையொட்டிய கடல் பகுதியையும் ஒட்டுமொத்தமாக அழிக்கின்ற வேலையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது, அதற்கு மாநில அரசும் கதவை திறந்துவிடுகிறது. காவிரிப்படுகை பாதிப்புக்கு உள்ளானால் டெல்டா மாவட்டத்தில் 15 லட்சம் பேர் வேலையை இழந்து அகதிகளாக வெளியேற நேரிடும். எனவே இத்திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்," என்கிறார்.