கெங்கவல்லி அருகே நிலத்தகராறில் விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பி இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 42). லாரி ஓட்டுநரான இவர், விவசாயமும் செய்து வந்தார். இவருடைய அத்தை பங்காரு (வயது 66).
இவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் பொதுவாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாசன் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்துள்ளார். பங்காருவின் பேரன்களான ரவிச்சந்திரனின் மகன்கள் மணிகண்டன் (வயது 31), விஜி (வயது 28) ஆகியோர் பொதுச்சொத்தில் சரிபாதியாகப் பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு சீனிவாசனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, கடம்பூர் & பைத்தூர் சாலையில் சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, அவரை மணிகண்டனும், விஜியும் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதையடுத்து ஆத்தூர் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவல்துறையினர் மணிகண்டன், விஜி மட்டுமின்றி அவர்களுடைய தந்தை ரவிச்சந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 26- ஆம் தேதி, மணிகண்டனும், விஜியும் ஆத்தூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில், இருவரையும் ஆத்தூர் கிளைச்சிறையில் 15 நாள்கள் காவலில் அடைத்தனர்.
இதற்கிடையே, அவர்களுடைய தந்தை ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மேலும், சரணடைந்த கொலையாளிகள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஆத்தூர் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.