தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் 100 டிகிரி அளவில் சுட்டெரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே நேற்றுமுன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் படிப்படியாக தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறும். பங்களாதேஷ் நாடு இந்த புயலுக்கு 'ஃபானி' என பெயரிட்டுள்ளது.
இந்த புயல் தமிழக கரையை நெருங்கும்போது மிக கனமழை பெய்யக் கூடும் என்றும், அப்போது பலத்த காற்று வீசக்கூடும், அதனால் சேதமும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு 'ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கோடை வெப்பம் 97.7 டிகிரி, 96.8 டிகிரி, 94 டிகிரி, 95 டிகிரி என நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.
அதேசமயம் இன்று முதல் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி, காரைக்கால், கடலூர் கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்திய பெருங்கடலிம் பூமத்திய ரேகை பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை முதல் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் தென் மேற்கு வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீன்வார்கள் தங்கள் மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.