
நாமக்கல்லில், டாஸ்மாக் நிறுவனத்திடம் மதுபான பாட்டில்களை கடைகளுக்குக் கொண்டு செல்ல போலி ஆவணங்கள் மூலம் லாரி வாடகை ஒப்பந்தப் பத்திரம் சமர்ப்பித்த நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கூத்தகவுண்டம்பாளையம் அவினாசிப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மண்டல மேலாளர் அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் மதுபான பாட்டில்களை கொண்டு செல்ல ஒப்பந்தம் எடுத்து இருந்தார்.
மதுபான பாட்டில்களை டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015ம் ஆண்டு ஜனவரி வரையிலான வாடகையை டாஸ்மாக் நிறுவனம் இவருக்கு தரவில்லை. இதுகுறித்து அவர் சேலத்தில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டபோது, போலி ஒப்பந்தப் பத்திரத்தை சிலர் கொடுத்து இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கணேசன் மகன் ஜெகதீஸ்குமார் மாவட்ட எஸ்பி, மேற்கு சரக ஐஜி, தமிழக டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்தும்படி டிஜிபி, நாமக்கல் மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில், இந்தப் புகார் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட எஸ்பியிடம் ஜெகதீஸ்குமார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
என்னுடைய தந்தை கணேசன். இவருக்கு, ஜெயலட்சுமி டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனம் வாடகை ஒப்பந்தம் அளித்து இருந்தது. மதுபான பாட்டில்களை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு சென்றது தொடர்பாக 16.6.2014 முதல் 31.1.20215 வரையிலான காலகட்டத்திற்கான லாரி போக்குவரத்து வாடகை 51 லட்சம் ரூபாய் டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு வர வேண்டியுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அலுவலகத்தில் விசாரித்தபோது, என் தந்தை மற்றும் அவருடைய பங்குதாரர்கள் இடையே பிரச்சனை உள்ளதால் வாடகைப் பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்கள். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம், என் தந்தையின் பெயருக்கு மட்டும்தான் ஒப்பந்தம் அளித்து இருந்தது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த பழனியப்பன், ஈஸ்வரன், ஜெகதீசன், மாதேஸ்வரன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து எனது தந்தையின் கையெழுத்தைப் போலியாக போட்டு, கூட்டு ஒப்பந்தம் தயாரித்து டாஸ்மாக் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். இதற்கு டாஸ்மாக் அலுவலக ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த ஒப்பந்தப் பத்திரம் குறித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இந்த பத்திரம் வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
கூட்டு ஒப்பந்தப் பத்திரத்தில் போடப்பட்டுள்ள எனது தந்தையின் கையெழுத்து போலியானது என அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, போலி ஒப்பந்தப் பத்திரம் தயாரித்து போலி கையெழுத்து போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனியப்பன், ஈஸ்வரன், ஜெகதீசன், மாதேஸ்வரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.