![the fake officer who threatened the police](http://image.nakkheeran.in/cdn/farfuture/W7Pl64ccUc7EAgM56lhHFZGSpc4DQbm6BnsXulaY6O8/1699117371/sites/default/files/inline-images/po_18.jpg)
மத்திய அரசு அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் (57). இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நாக சுப்பிரமணியன் அந்த பணியை முடிப்பதற்காக டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் பேசுவது போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளார். அதன் பின்பு, அந்த அதிகாரியிடம் அவர்,அந்த நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்குமாறு மிரட்டும் தொனியில் பேசி போனை துண்டித்து விட்டார்.
அதன் பின்னர், நாகசுப்பிரமணியன் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து டெல்லியில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகமடைந்து நாகசுப்பிரமணியை விசாரித்துள்ளனர். மேலும், நாகசுப்பிரமணியன் எண்ணையும், டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரி எண்ணையும் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்துள்ளனர். அப்போது, நாகசுப்பிரமணியன் அதிகாரி போல் பேசியது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நாகசுப்பிரமணியனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், நாகசுப்பிரமணியன் நிறுவனத்தின் வழக்கு ஒன்று மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக அந்த வழக்கு கிடப்பில் உள்ளதாக கூறப்படும் அந்த வழக்கை விரைந்து முடிக்க கட்டுமான நிறுவனம் இவரை நியமித்துள்ளது. அதனால், நாக சுப்பிரமணியன் அந்த பணியை முடிப்பதற்காக டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் பேசுவது போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் பேசியுள்ளார் என்பது தெரியவந்தது.